Skip to main content

“பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு” - வானிலை மையம் எச்சரிக்கை!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
"Chance of rain with strong winds" - Meteorological Department warning

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அத்தோடு தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியது. மேலும் 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (12.05.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (13.05.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மறுநாள் (15.05.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 16 ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்