Skip to main content

மனம் உடைந்த மவுசு குறைந்த பாலியல் தொழிலாளி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 08

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

jay-zen-manangal-vs-manithargal-08

 

ஒரு பாலியல் தொழிலாளியின் கண்ணீர் கதை குறித்து ’மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையில் வெறும் உடல் முதலீடு மட்டுமே பிரதானம் அல்ல. அவர்களுக்கும் குடும்பம் உண்டு. பல்வேறு கனவுகள் உண்டு. பாலியல் தொழிலாளிக்கும் வயதாகும். ஒருகட்டத்தில் அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் குறைவார்கள். அவர்கள் மீது இருக்கும் கவர்ச்சி குறையும். அப்படியான ஒரு நிலையில் ஒரு பெண் கவுன்சிலிங்கிற்கு வந்தார். அவர் மிகவும் பணக்கார வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். பொருளாதார ரீதியாக அவருக்கு எந்தக் குறையும் இல்லை. 

 

தன்னுடைய தொழிலில் சரிவு ஏற்படுவதை அவர் உணர்கிறார். அதனால் அவருக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கை குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. தம்முடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்கிற எண்ணம் கூட அவருக்கு வருகிறது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று குழம்பினார். இவை அனைத்தையும் என்னிடம் சொல்லும்போது அவருக்கு கண்ணீர் வந்தது. இதுகுறித்த கவுன்சிலிங் அவருக்கு தேவைப்பட்டது. 

 

அப்போது அவர் ஒரு சூப் ஆர்டர் செய்து சாப்பிட்டார். சாப்பிட்ட பிறகு அந்த கப்பை ஹோட்டல் ஊழியர் வந்து எடுத்துச் சென்றார். "நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். "சூப் சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு கப்பைக் கொடுத்துவிட்டேன்" என்றார். "ஏன் அதைக் கொடுத்தீர்கள்?" என்றேன். "எனக்குத் தேவை சூப் மட்டும் தான்" என்றார். "இதிலேயே உங்களுக்கான பதில் இருக்கிறது" என்றேன். மேலும் அந்தக் கப்பை ஊழியர் சுத்தம் செய்து அடுத்து இன்னொருவருக்கு வழங்குவார். அந்தக் கப் தன்னுடைய அடுத்த பயணத்தைத் தொடர்கிறது. ஒரு விஷயம் முடிந்தால் அத்தோடு ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிவதில்லை. 

 

"அதுபோல் நீங்களும் இன்னொரு புதிய வாழ்க்கையை ஏன் தொடங்கக்கூடாது?" என்று கேட்டேன். பொதுவாக அவருக்கு உடைகள் மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருந்தது. அது தொடர்பான ஒரு தொழிலை அவர் ஏன் தொடங்கக்கூடாது என்று கேட்டேன். அது அவருக்கு ஒரு புதிய எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த சந்திப்புக்குப் பிறகு அவர் தன்னுடைய பழைய வாழ்க்கை குறித்து நிச்சயம் சிந்தித்திருக்க மாட்டார்.