Skip to main content

விராட் கோலி கோமாளி போல நடந்து கொள்கிறார்! - தென்ஆப்பிரிக்க வீரர் குற்றச்சாட்டு

Published on 15/03/2018 | Edited on 16/03/2018

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கோமாளி போல் நடந்துகொள்வதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பால் ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

PaulHarris

 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கெனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியைக் கைப்பற்றியுள்ளன. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சிறப்பாக ஆடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஒவ்வொரு விக்கெட்டின் போதும் அவர் வெளிக்காட்டிய ஆக்ரோஷம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் ஆகியோரிடம் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து போட்டி நடுவர்கள் புகாரளித்தனர். இதையடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரபாடா விளையாட ஐசிசி தடைவிதித்தது. இதுகுறித்து ராபாடா கூறுகையில், ‘களத்தில் எனது அணுகுமுறைகளை மாற்ற நினைக்கிறேன். இதனால், மொத்த அணியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது’ என வருத்தம் தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், ரபாடா மீதான தடை குறித்து பேசியுள்ள தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ், ‘ரபாடா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், எல்லோரும்தான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தென்ஆப்பிரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விராட் கோலி கோமாளி போல் நடந்துகொண்டார். ரபாடா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணியின் மீது ஐசிசிக்கு தனிப்பட்ட பிரச்சனை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது’ என சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.