Skip to main content

'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024

 

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்குள் ஒரு தரப்பினர் நுழைய அனுமதி மறுத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருவிழாவானது நிறுத்தப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாத நிலையில்  இந்த மோதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

அதேபோல கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் ஒரு தரப்பு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் கலவரம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்