Skip to main content

வீரர்களின் மரண பயம் - ஐந்தாவது டெஸ்ட் இரத்தானதற்கு காரணம் கூறிய கங்குலி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

dada

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரத்தான போட்டியைத் திரும்ப நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் தாங்கள் பங்கேற்பது பாதிக்கப்படக்கூடாது என கருதியே ஐந்தாவது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட சிலர் குற்றஞ்சாட்டினார்.

 

இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமல்ல என தெரிவித்துள்ளார்.

 

ஐந்தாவது டெஸ்ட் இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி கூறியதாவது; "இல்லை.. இல்லை. பிசிசிஐ ஒருபோதும் பொறுப்பற்ற வாரியமாக செயல்படாது. மற்ற வாரியங்களையும் நாங்கள் மதிக்கிறோம். வீரர்கள் விளையாட மறுத்தனர். ஆனால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. பிசியோ யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். நிதின் படேல் (கரோனாவால் பாதிக்கப்பட்ட பிசியோ) தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு யோகேஷ் பர்மார் மட்டும்தான் வீரர்களுடன் பணியாற்றி வந்தார்.

 

யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருக்கமாக இருந்ததோடு, அவர்களுக்கு கரோனா பரிசோதனைகளைக் கூட மேற்கொண்டார். அவர் வீரர்களுக்கு மசாஜும் செய்துவந்தார். அவர் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தார். அவருக்கு கரோனா உறுதியானதை அறிந்ததும் வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்கள் பயந்தனர். மரண பயத்தை அடைந்துவிட்டனர். கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது எளிதானதல்ல. நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.”

இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.