Skip to main content

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து படைத்த வரலாற்றுச் சாதனை!

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

england creates world record in odi history by scoring 498 runs

 

நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்தது மூலம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 

 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி நெதர்லாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்குமான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீன் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலான் - சால்ட் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. 

 

அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லர் - லிவிங்ஸ்டன் ஜோடியும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் சதம் அடித்ததோடு,மொத்தமாக 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் குவித்தது. லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 

 

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 2018ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 481 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையை இதன்மூலம் மீண்டும் முறியடித்துள்ளது இங்கிலாந்து அணி. மேலும், ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இங்கிலாந்து அணி தன்வசமாக்கியுள்ளது.