பிப்ரவரி – 24 – தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தையை முத்தையா பிறந்த நாள்
தட்டச்சு இயந்திரம் பொதுவெளிக்கு விற்பனைக்கு வந்தது 1875ஆம் ஆண்டு. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வகையில் தான் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1930களில் தான் தமிழில் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை உருவாக்கியவர் முத்தையா. அதனாலேயே அவர் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சுண்டிக்குளி என்கிற கிராமத்தில் பிறந்தவர் முத்தையா. இவருடைய தந்தை இராமலிங்கம். இவரது குடும்பம் பெரிய குடும்பம். இராமலிங்கத்துக்கு 5 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள். அவர்களில் கடைக்குட்டி முத்தையா. இவர் 1886 பிப்ரவரி 24ந்தேதி பிறந்தார்.
சிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயாரை அடுத்தடுத்து இழந்தார். இருந்தும் படிப்பை இவர் இழக்க விரும்பவில்லை. இவரது சகோதர – சகோதரிகள் இவரையும் நன்றாக படிக்கவைத்தனர். 1907ல் மலேசியா நாட்டுக்கு அகதியாக சென்றார். அங்கு சென்றும் படித்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இரயில்வேயில் பணியாளராக வேலைக்கு சேர்க்கப்பட்டார். அந்த வேலை வேண்டாமென சில ஆண்டுகளிலேயே வேலையை விட்டு நின்றுவிட்டார்.
சிங்கப்பூரில் செயல்பட்ட அய்ல்ஸ்பெரி என்கிற ஆங்கிலேய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் கணக்காளராக பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்தது முதல் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். தகவல்களை சுருக்கெழுத்தில் எழுதுவதை, படிப்பதை கற்றார். 1913ல் நடைபெற்ற ஆசியா அளவிலான சுருக்கெழுத்து போட்டியில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பதக்கம் பெற்றார்.
சுமார் 30 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். பணியாற்றியபோது, ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் என்கிற தட்டச்சு இயந்திரம் புழக்கத்துக்கு வந்தது. அதில் நிறுவனத்துக்குத் தேவையான கடிதங்களை தட்டச்சு செய்தனர். அவரும் அதை செய்தார். ஆனால் தனது தாய்மொழியான தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கமே அவரை தமிழ் தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடிக்கத் தூண்டியது.
தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து, 247 எழுத்துக்களை தட்டச்சு பொறியில் உள்ள 46 விசைகளில் கொண்டு வருவது எப்படி என யோசித்தார். துணை எழுத்துக்கள், கொம்புகளை தனியாக ஒரே விசையில் கொண்டு வருவது எப்படி என திட்டமிட்டார். அவைகளை சீர் செய்தபோது 72 க்கு கீழ் குறைக்க முடியவில்லை. அதைக்கொண்டு முதலில் ஒரு தட்டச்சு இயந்திரத்தை மாடலாக உருவாக்கினார். பின்னர் அதில் திருத்தங்கள் செய்து மீண்டும், மீண்டும் முயற்சி செய்து தற்போது உள்ள தமிழ் தட்டச்சு விசைப்பலகையை உருவாக்கி சாதனை படைத்தார்.
1920ல் அதை ஜெர்மனியில் உள்ள சைடல் நவ்மான் என்கிற இயந்திர உற்பத்தி நிறுவனத்திடம் தந்து இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். அதில் பெரும் பணம் கிடைத்தது. அந்த தொகையை கொண்டு மக்களுக்கு உதவி செய்தார். இலங்கையின் தமிழர் – சிங்கள இனமோதல்கள் குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுத தகவல்களை திரட்டி எழுதி முடித்தார். அது நூல் வடிவம் பெறும் முன்பே அவர் தனது 63வது வயதில் மறைந்தார்.
அவர் மறைந்தாலும் தமிழ் உலகத்துக்கு அவர் உருவாக்கி தந்துவிட்டு சென்ற விசைப்பலகையை தொடும்போதெல்லாம் அவர் பெயர் ஒலிக்கும்.