Skip to main content

உழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா?.. -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #10

Published on 29/06/2018 | Edited on 09/07/2018

சொற்களைப் பற்றிய உணர்ச்சி ஏற்பட்டவுடன் அங்கிங்கெனதாபடி எங்கும் சொற்களாகவே நம் கண்களுக்குத் தெரியும். ஒரு சொல் நம்மை எப்படியெல்லாம் வந்தடைகிறது என்பதை நினைக்கையில் புதுவகையான பேருணர்ச்சி ஏற்படும். ஓர் அரிசி மணி நம் உணவுத்தட்டில் சோற்றுப் பருக்கையாக வந்து விழுவதைப்போன்ற பரவயப்படுத்தும் நிகழ்வு. சொல்லுணர்ச்சி ஏற்பட்டவுடன் காணுமிடமெங்கும் சொற்களாகவே தோன்றும். அடிக்கடி தென்படும் சொற்களுக்கும் அரிதாகத் தென்படும் சொற்களுக்குமிடையேயான வேறுபாட்டினை உணர முடியும். 
 

soller uzhavu

 

 

 

உங்களுக்கு மிகவும் பிடித்த சொல் எது? உங்களையே வினவிக்கொள்ளுங்கள். சில சொற்கள் நம்மனத்தின் திறவாத் தாழ்களை நீக்கும் தன்மையுடையவை. சில சொற்கள் நம் ஆழ்மனநினைவுகளைத் தொட்டு எழுப்பவல்லவை. சில சொற்கள் கண்ணீரைப் பெருக்கும்.  சிலவற்றுக்கு ஆறுதல்படுத்தி அணைக்கும் ஆற்றலுண்டு. இந்தப் பக்கத்தின் வழியே நான் உங்கள் மனத்தை அடைவதற்குக் கருவியாகின்றவையும் சொற்களே. 

 

ஆறாம் வகுப்புப் படிக்கையில் எங்கள் பள்ளியில் ஓர் ஆசிரியர் இருந்தார். எங்கள் வகுப்பாசிரியர் வராதபோது அவர் இரண்டு வகுப்புகளைச் சேர்த்து அமர்த்திக்கொள்வார். பாடம் நடத்துகையில் ஒவ்வொரு சொற்றொடரைக் கூறியதும் “விளங்குதா?’ என்றே முடிப்பார். பிற ஆசிரியர்கள் “புரிந்ததா?” என்று கேட்கையில் அவர் “விளங்குதா” என்று கேட்டது புதிதாக இருந்தது. விளங்கியதா, விளக்கம் பெற்றாயா என்கிறார் அவர். என்னே அருமையான சொல். அது முதற்கொண்டு விளங்குகிறது, விளங்கும், விளங்கவில்லை, விளங்கிக்கொண்டான் ஆகிய சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். புரிந்தது என்ற சொல்லை என் எழுத்தில் அரிதாகத்தான் காண முடியும். புரிந்தது என்பதைக்காட்டிலும் விளங்கியது என்னும் சொல் தேர்ச்சியான பொருள் காட்டுவதாகும். விளங்கு, விளக்கு என்னும் இரண்டு வினைவேர்களும் வியக்கத்தக்க பொருளாட்சி உடையவை. 

 

 

 

என் நண்பரின் தாயார் பழுத்து முதிர்ந்தவர். கொங்குத் தமிழின் இலக்கணம் என்று கொள்ளத்தக்கவர். அவர் வீட்டுக்கு நான் எப்போது சென்றாலும் “சோறுண்கிறயா?” என்றுதான் கேட்பார். “வாரபோதே உண்டுட்டுத்தான் வந்தனுங்கொ…” என்று விடை கூறுவேன். உண்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதற்காக விட்டுவிட மாட்டார். “உண்டுட்டு வாரயா ? எப்ப உண்டே ?” என்று கேட்பார். “காலையில உண்டன்ங்கொ…” என்று கூறினால் “கார்த்தால உண்டது என்னத்துக்காகறது… இப்ப உண்கலாம் வா…” என்று சோறிடுவார். சாப்பிடுவது, தின்பது என்பதற்கு மாற்றான கூர்மையான பொருளுடைய சொல்தான் உண்ணல். உண் என்ற வினைவேரிலிருந்துதான் உணவு, ஊண் ஆகிய சொற்களே பிறக்கின்றன. பொருளழகும் உயிரன்பும் சேர்ந்து பெருகி “உண்கிறயா ?” என்று அவர் வாய்வழியே கொங்கின் இசையோடு வெளிப்படும்போது நான் பெறுகின்ற குளிர்ச்சியை எடுத்தியம்பவே இயலாது. அது முதற்கொண்டு உண்கிறாய், உண்டான், உண்பது போன்ற சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். சாப்பிட்டான் என்று அரிதாகத்தான் எழுதுவேன். 

 

 

 

சொற்களை நகமும் தசையும், உயிரும் உணர்வுமாய் அறிந்துணர்வதற்கு அவற்றை ஆளும் மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்க வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மக்களே என் சொல்லாய்வுக்கும் அறிதலுக்கும் வலிமையான சான்றாகிறார்கள். அவர்களுடைய வாய்மொழியில் எழுதித் தீராத புதுச்சொற்கள் கிடைக்கின்றன. இலக்கணத்தை அணுகுவதற்குரிய திறப்புகளையும் அவர்களிடமிருந்தே பெறுகிறேன். என்னுடைய தாத்தா மலங்கழிக்கச் செல்வதைச் “சலவாரைக்குப் போறது” என்பார். சலவாரம், சலவாரை போன்ற சொற்களை அகராதிகளில் காண முடியவில்லை. உழவாரம் என்ற சொல் அகராதியில் இருக்கிறது. உழவுத் தொழிலில் “புல் பூண்டு முதலான பயனற்ற களைகளைக் களைதலே”  உழவாரப்பணி. சலவாரம்/சலவாரை என்றால் உடலிலிருந்து நீர்முதலான கழிவுகளை நீக்குவது என்ற பொருளில் விளங்கிக்கொள்கிறேன். மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்காவிடில் அச்சொற்கள் அச்சுமேடை ஏறாமல் காற்றோடு கலந்துவிடுவதற்குரிய வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.

முந்தைய பகுதி:

"நத்திப் பிழைக்கிறான்" என்பதன் அர்த்தம் தெரியுமா??? -கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #9

 

அடுத்த பகுதி:

மனமும், நெஞ்சும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11