Skip to main content

சமயக் காலத்தில் சாதி இருந்ததா? - நாஞ்சில் சம்பத் கூறும் தமிழர் வரலாறு! 

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமயக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

சமீபகாலமாக தமிழ்ச் சமூகத்தில் சாதி உணர்ச்சி பல்கிப் பெருகியிருக்கிறது என்று தமிழ் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் எல்லாம் தனக்குத்தானே சொல்லி நொந்துகொண்டிருக்கிறார்கள். அது உண்மைதானா என்று பார்த்தால், உண்மைதான் என்பதற்குச் சான்றாக சில சம்பவங்கள் உள்ளன. ஒரு சாதியற்ற சமூகத்தைப் படைக்க வேண்டும் என விரும்பும்போது கடந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. சமயக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது?

 

சமய காலத்தில் அப்பூதி அடிகள் என்று ஒருவர் இருந்தார். பிராமண குலத்தைச் சேர்ந்தவர் அவர், வேளாளர் குலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை தன்னுடைய குருவாகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டார். அதேபோல பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார், வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை குருவாகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டார். ‘இவன் என் தம்பி; என் தம்பி உன் தம்பி’ என்று ராமன் லக்குவனை சுட்டிக்காட்டியும், சீதா தேவியை சுட்டிக்காட்டி ‘இவள் உன் கொழுந்தி’ என்றும் குகனிடம் கூறுகிறான். வேடர் குலத்தில் பிறந்த குகனிடம் தன்னுடைய தம்பியை உன் தம்பி என்றும் தன்னுடைய மனைவியை உன் கொழுந்தி என்றும் ராமன் கூறுவதாக கம்பன் கூறுகிறான். தமிழும் சமயமும் என்று சிந்திக்கிறபோது மதுரகவி ஆழ்வாரும் நம்மாழ்வாரும் ஒரே வரிசையில் வந்து நிற்கின்றனர். அப்பூதி அடிகளும் திருநாவுக்கரசரும் ஒரே வரிசையில் வந்து நிற்கிறார்கள். 

 

சமயத்தின் பெயரால் தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய காலத்தில், சமயத்தில்தான் இந்த சங்கதிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அன்றைக்கு எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. திருப்பாணாழ்வாரும் நந்தனாரும் இறைவனின் அன்பிற்கு பாத்திரமானார்கள். திருநாளைப்போவார் என்ற நந்தனார் தரிசிக்க, நந்தியை விலக்கச் சொல்லி இறைவன் கட்டளையிட்டார். தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த நந்தனாருக்காக நந்தியை விலக்கி எம்பெருமான் சிவன் காட்சி கொடுத்தார் என்றால் இதுதான் தமிழ்நாட்டில் காணக்கிடைக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாட்டில் நமக்குத் தெரிந்த சமய உணர்ச்சி. சமயத்திற்குள்ளே இந்த செய்திகளெல்லாம் கருவூலங்களாக கொட்டிக்கிடக்கின்றன என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. 

 

தெய்வச் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தைப் படிக்கிறபோது இந்தக் காட்சிகளையெல்லாம் அவர் வரிசைப்படுத்துகிறார். பிராமண குலத்தில் பிறந்த அப்பூதி அடிகள், வேளாண் குலத்தில் பிறந்த திருநாவுக்கரசரை தன்னுடைய இதய சிம்மாசனத்தில் வைத்திருந்தார். ஆங்கில கலாச்சாரத்தில் ஒன்றாம் ஹென்றி, இரண்டாம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி என்று அழைப்பதைப்போல தன்னுடைய குழந்தைகளுக்கு முதலாம் திருநாவுக்கரசர், இரண்டாம் திருநாவுக்கரசர், மூன்றாம் திருநாவுக்கரசர் எனப் பெயர் வைத்தார். இந்த செய்தியைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் இல்லத்திற்கு திருநாவுக்கரசர் இல்லம் என்று பெயர். அவர் வீட்டில் இருந்த நெல் அளக்கும் மரக்காலுக்கு திருநாவுக்கரசர் மரக்கால் என்று பெயர். அவர் அமைத்த தண்ணீர் பந்தலுக்கு திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்று பெயர். உண்ணும்போதும் உறங்கும்போதும் இயங்கும்போதும் திருநாவுக்கரசர் குறித்தே அவர் சிந்தித்தார் என்பது சாதி வேறுபாடு அற்ற ஒரு சமூகம் அன்றைக்கு இருந்ததற்கான சான்று. சாதியை வைத்துக்கொண்டு சமகால தமிழகத்தில் இன்றைக்கு சச்சரவுகளும் மோதலும் உருவாகிவருகிறது. இதை செய்வதற்கென்றே இன்றைக்குச் சிலர் கிளம்பியுள்ளார்கள். இப்படியான சூழல்தான் இன்றைக்கு நிலவுகிறது. ‘காட்டு வேடனுக்குக் கருணை பொழிந்த உன் கருணையை மனதில் வைத்துதான் உன் காலடியில் வந்து விழுந்தேன்’ என்று குலசேகர ஆழ்வார் அன்றைக்குச் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த நாள் தமிழகம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருந்துள்ளதை அறிய முடிகிறது.