Skip to main content

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் விலங்கினம்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

GREAT APES

 

முதன்முதலில் சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வெற்றியும் கண்டன. இதனையடுத்து தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

மனிதர்களை மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளில் பல்வேறு விலங்குகளுக்கும் கரோனா தொற்று உறுதியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில், நான்கு ஒராங்குட்டான் வகை குரங்குகளுக்கும் மற்றும் ஐந்து போனொபோ வகை குரங்குகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்குப் பிறகு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் இனம் என்ற பெயரை குரங்கினம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம், இந்த உயிரியல் பூங்காவில் எட்டு கொரில்லாக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்தப் பூங்காவில் உள்ள மற்ற வகை குரங்குகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று ஏற்பட்ட குரங்குகளுக்கு ஏற்கனவே கரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதால் அவற்றுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

 

குரங்குகளுக்குப் போடப்பட்ட இந்த தடுப்பூசியைக் கால்நடை மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட கரேன் என்ற குரங்கிற்கு ஏற்கனவே 1994இல் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துகொண்ட முதல் ஓராங்குட்டான் வகை குரங்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்