கானா நாட்டின் அரசு, மின்னணு பரிவர்த்தனைகளுக்கு 1,75 சதவீத வரியை விதிக்க முடிவு செய்தது. ஆனால் அந்தநாட்டின் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக காங்கிரஸ், இந்த வரி விதிப்பு குறைந்த வருமானம் உடையவர்களையும், முறையான வங்கித் துறைக்கு வெளியே இருப்பவர்களையும் பாதிக்கும் என இந்த வரி விதிப்பை எதிர்த்தது.
இந்தநிலையில் இந்த வரி விதிப்பு தொடர்பான வாக்கெடுப்பு அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வரி விதிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஏறக்குறைய சரி சமமாக இருந்ததால், துணை சபாநாயகரின் வாக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்தநிலையில் துணை சபாநாயகர் வாக்களிக்க தனது இருக்கையை விட்டு எழ முயலவே, அவரை எழாமல் தடுக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரின் இருக்கையை நோக்கி வந்தனர்.
அப்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே மோதல் வெடித்தது. எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டதுடன், ஒருவரை ஒருவரை ஒருவர் கைகளால் குத்தி தாக்கிக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து கானா நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.