Skip to main content

சுட்டுக்கொல்லும் இராணுவம்! அச்சமின்றி போராடும் மக்கள்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

myanmar

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது இராணுவம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற உயர்நிலை கல்வி படிக்கும், பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சமூகவலைதளங்கள் மட்டுமின்றி, இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தையும் மியான்மர் அரசு அறிவித்தது.

 

இந்தநிலையில், போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது, கடந்த 28 ஆம் தேதி, மியான்மர் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. இந்தநிலையில், நேற்று மீண்டும் மியான்மர் இராணுவம், போராடிவரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

 

இராணுவம் தாக்குதல் நடத்தினாலும், பொதுமக்கள் அச்சமின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இதில் ஏற்பட்ட காயங்கள் அல்லது உயிரழப்புகள் குறித்து தகவல் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்