Skip to main content

"எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம்" - ஃபேஸ்புக் முடிவால் கொதிக்கும் ட்ரம்ப்!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

donald trump

 

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், ட்ரம்பின் அனைத்துக் கணக்குகளையும் முடக்கின. ட்விட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடை விதித்தது. இந்தநிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் ட்ரம்பிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

 

இதுகுறித்து அந்த நிறுவனம், "ட்ரம்பின் கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, அவரது நடவடிக்கைகள் எங்களது விதிகளைக் கடுமையாக மீறுவதாக நம்புகிறோம். இது எங்களது புதிய அமலாக்க விதிமுறையில் அதிகபட்ச தண்டனையைப் பெறுகிறது" என விளக்கமளித்துள்ளது.  ட்ரம்ப் மீதான தடை, முதன்முதலில் அவரது கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் விதிகளை மீறும் தலைவர்களைக் கையாள தமது அமலாக்க விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

 

இந்தநிலையில், ஃபேஸ்புக்கின் தடைக்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஃபேஸ்புக்கின் இந்த முடிவு, 2020 அதிபர் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த 75 மில்லியன் மக்களுக்கும், வாக்களித்த மேலும் பலருக்கும் ஏற்பட்ட அவமானம் ஆகும். இதுபோல் தணிக்கை செய்வது மற்றும் அமைதியாக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டு அதிலிருந்து தப்பிச் செல்ல அவர்களை அனுமதிக்கக்கூடாது. இறுதியில் நாம் வெல்வோம். இனியும் நமது நாடு இந்த துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொள்ளாது" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்