Skip to main content

157 பேர் இறந்த விமான விபத்தில் அதிர்ஷ்டத்தால் உயிர் பிழைத்த ஒரே நபர்...

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

ethiopian-airlines

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் நேற்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டினர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

மொத்தம் 157 பேர் பலியான இந்த விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள். இது தவிர கனடா நாட்டைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா மற்றும் ஸ்லோவோகியா நாட்டைச்சேர்ந்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்ற நபர் விமான நிலையத்திற்கு  2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளார். இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், "இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் பயணிக்க முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அதன் பின் ஒரு காவல்துறை அதிகாரி என்னை சமாதானம் செய்தார். விமானம் கிளம்பிய ஆறு நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்