Skip to main content

கட்டாயக் கண்காணிப்பு... சீனாவை உலுக்கிய தனிமைப்படுத்தப்பட்ட சிறுவனின் மரணம்...

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 490 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனின் மரணம் ஒட்டுமொத்த சீனாவையும் உலுக்கியுள்ளது.

 

chinese disabled child passed away after his father quarantined of corona fear

 

 

ஹுபெய் மாகாணத்தின் ஹுவாஜியாஹே பகுதியில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்துள்ளான். எழுந்து நடக்க முடியாத, தனது அடிப்படை தேவைகளை கூட தானாக நிறைவேற்றிக்கொள்ள முடியாத அந்த சிறுவனை அவரது தந்தையும், சகோதரரும் 16 ஆண்டுகளாக கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர், அவர்கள் இருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்டு கட்டாய கண்காணிப்பில் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் சிறுவன் தனித்து விடப்பட்டுள்ளான். உணவு வழங்கவோ, பராமரிக்கவோ ஆள் இல்லாத நிலையில், தனித்துவிடப்பட்ட அந்த சிறுவன், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை  மட்டுமே உணவு உட்கொண்டுள்ளான். தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவரது தந்தை சீன சமூக ஊடகமான வெய்போவில், மகனைப் பராமரிக்குமாறு உதவி வேண்டி பதிவிட்டிருந்தார். இருப்பினும் தகுந்த உதவிகள் கிடைக்காததால், அச்சிறுவன் உயிரிழந்துள்ளான். குடும்பத்தார் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனின் மரணம் உலகம் முழுவதிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்