Skip to main content

'வி.ஐ.பி.' படம் விவகாரம்: அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி! 

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

VIP Film affair; High Court allowed to take further action on sent notices!

 

நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதி மீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் உத்தரவிடக் கோரி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆட்சேபத்துக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும்  தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் சினிமோட்டோகிராஃப் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும்,  சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குநர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையைத் தொடரவில்லை என மத்திய - மாநில அரசுகள் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் வொண்டர்பார் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பு தரும் பொருள் என கருதப்படுவதாகவும், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பாதிப்புக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

 

மேலும், இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

 

புகையிலை சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பி, புகார்கள் மீது எந்த தாமதமுமின்றி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்