Skip to main content

திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-சீமான் வலியுறுத்தல்

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

 

seeman

 

 

 

'மே17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய 'மே17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

 

 

மக்களாட்சித் தத்துவத்தையே முற்றுமுழுதாகக் குலைக்கிற இதுபோன்ற ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் யாவும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நாசகாரத் திட்டங்களை மண்ணில் புகுத்துவதும், அதற்கெதிராக கருத்தியல் பரப்புரையையும், களப்பணியும் செய்யும் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோக வழக்கு என அடக்குமுறைகளை ஏவிவிடுவதுமான நடவடிக்கைகள் யாவும் அரசப்பயங்கரவாதத்தின் உச்சகட்டமாகும். தம்பி திருமுருகன் காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு என்பது ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். ஆகவே, அவர் மீது பொய்யாக தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கினைத் திரும்பப் பெற்று தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்