Skip to main content

''கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க வேறு, தற்போது இருக்கும் தி.மு.க வேறு,''- குஷ்பு பரபரப்பு பேச்சு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

திருச்சி மாவட்டம் கோபி பகுதியில் உள்ள சமுதாயத் திடலில் இன்று (10/01/2021) ''நம்ம ஊர் பொங்கல்'' என்ற தலைப்பின் கீழ் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். மதியம் ஒரு மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பொங்கல் விழாவில் வந்து கலந்து கொள்வார் என்று அறிவித்திருந்த நிலையில், இதற்காக 150- க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை காலை 10.00 மணிக்கு திடலில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் வர தாமதமானதால் பொங்கல் பானைகளில் மதியம் 01.00 மணியளவில் பொங்கல் பொங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மாலை 05.00 மணியளவில் விழாவிற்கு வந்த குஷ்பு, மேடையில் ஏறி அங்கு பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட சிறு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தார். 'பா.ஜ.க.விற்கு கண்டிப்பாக வாக்களியுங்கள்' என்று வாக்கு சேகரித்து விட்டு அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவரிடம், 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, கடந்த தேர்தலிலும் அவர் இதை தான் பேசினார். தற்போது கலைஞர் இல்லாத ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறோம் இருந்தாலும் இன்று நடைபெறக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரிய அளவில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது. மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

ஸ்டாலின் கலைஞர் இவர்கள் இருவரையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேச முடியாது. கலைஞருடைய இடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. இந்தத் தேர்தலை சந்திக்கிறது. எடப்பாடிக்கு இது ஒரு புதிய சவாலான தேர்தலாகவே அமையும். தேசியக் கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை மிகப்பெரிய கட்சிகளாக இருக்கக்கூடிய பா.ஜ.க.வும், காங்கிரசும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், எந்தக் கட்சிகளும் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.

 

பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கும் கருத்திற்கு உங்களுடைய பதில் என்று கேட்டதற்கு, தாத்தாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பேரனா என்று பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது. நான் ஏன் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன் என்று இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது புரிந்திருக்கும். கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க. என்பது வேறு தற்போது இருக்கும் தி.மு.க. என்பது வேறு, என்றார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு திடலில் இருந்து புறப்பட்டு நுழைவாயில் அருகே வரும்போது திருச்சி மாவட்ட பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் கூட்ட நெரிசலில் கீழே விழுந்து மண்டை உடைந்ததால் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 150- க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானைகளோடு தங்களை ஒருமுறையாவது வந்து பார்ப்பார் என்று ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. காத்திருந்த பெண்களின் கூட்டத்தை எட்டிக்கூட பார்க்காமல் மேடைக்கு அருகிலேயே காரில் ஏறி வெளியேறினார்.

 

 

சார்ந்த செய்திகள்