Skip to main content

ஆற்றில் மூழ்கி இளைஞர் மரணம்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

 strom incident in villupuram

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது கண்டியங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் குமார். 40 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது மழை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் வீட்டிலிருந்து வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வயல்வெளிக்கு அருகே ஓடும் பம்பையாறு தண்ணீர் நிரம்பச் சென்றுள்ளது. ஆற்றின் பக்கம் மாடுகள் சென்றுள்ளது. குமார், மாடுகள் ஆற்றில் அடித்துச் சென்று விடுமோ என்று பதறிப் போய் வேகமாகச் சென்று மாட்டைப் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார் பம்பை ஆற்றில் தடுமாறி விழுந்துள்ளார்.

 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் குமார் ஆற்றில் விழுந்ததைப் பார்த்து சத்தம் போட்டுக் கத்தியுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு சென்று, பம்பை ஆற்றில் குதித்து குமாரை தேடியுள்ளனர். நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, ஆற்றில் மூழ்கிய குமாரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் தண்ணீரில் மூழ்கியதால் குமார் பரிதாபமாக இறந்து போயுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கண்டமங்கலம் போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குமாரின் மனைவி வி.ஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகரிலுள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நகரை ஒட்டி ஓடும் கோமுகியாற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 6 நாட்களாக அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை சிறுவன் என்ன ஆனார் என்பது தெரியவரவில்லை. 

 

இன்று, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஜியாவுல் ஹக் பறக்கும் கேமரா மூலம் ஆற்றங்கரைப் பகுதியில் தேடும் பணியை ஏற்பாடு செய்துள்ளார். மழையின் காரணமாக இப்படிப் பல்வேறு விதங்களில் மரணங்கள் தொடர்கின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்