Skip to main content

மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன சத்யபிரதா சாகு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Sathyaprada Saku gave happy news to women's rights scheme beneficiaries

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் மீதம் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அரசு ஏற்கனவே செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்க எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்