Skip to main content

காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்க... விவசாய சங்கம் கோரிக்கை

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
kaaveri

 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து சீராய்வு மனுவை  தாக்கல் செய்ய வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி பேசும் போது,

 

"காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நீரின் அளவைக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை மேல்முறையீடு செய்ய முடியாது என்றாலும், சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்பதை நடுவர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனை மாற்றி நாள்தோறும் நீர் பங்கீடு வழங்க வேண்டும். தமிழகத்திற்கு சொந்தமான, வர வேண்டிய நீரை கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க அனுமதிப்பதால்தான், அங்குள்ள விவசாயிகள் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகின்றனர். எனவே, நமக்கு வரவேண்டிய நீரை தினமும் வழங்க வேண்டும். 

 


காவிரி தீர்ப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க, காவிரியின் உப நதியான பவானி படுகை விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிற்கு கூடுதலாக வழங்கப்படும் 14.75 டிஎம்சி நீர், கழிவு நீராக மீண்டும் காவிரியில் கலக்கும் என்பதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

இதற்கு பதில் அளித்த மாவட்ட  ஆட்சியர் எஸ்.பிரபாகர், ‘இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார். 

சார்ந்த செய்திகள்