Skip to main content

ஏட்டு கொலை! எங்களை தடுத்தால் இதுதான் பதிலடி! நடுங்க வைக்கும் மணல் மாஃபியாக்கள்​!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

 

          ஒரு லோடு மணல் 70 ஆயிரம் ரூபாய்கு போய், குடியிருக்க ஒரு வீடு என்ற உழைக்கும் வர்க்கம் உட்பட மெத்தப் பணக்காரர்கள் வரையிலான கட்டுமான ஆசையைத் தகர்த்தவர்கள் மணல் மாஃபியாக்கள். எங்கே வேண்டுமானாலும் உரக்கச் சொல்லலாம் என்பதை நிகழ்வுகள் வெளிச்சம் போடுகின்றன.    
 

நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டான ஜெகதீஸ்துரை, நடு இரவில் மணல் கொள்ளையர்களைத் தடுக்கச் சென்றவர். அந்த டாண்களால் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகத்தையே பதறவைத்தது. நாங்கள் சர்வ வல்லமை கொண்டவர்கள். எங்கள் தொழிலைத் தடுத்தால் இதுதான் கதி. எவரும் குறுக்கிடக்கூடாது. இதுதான் பதிலடி என்கிற அடிவயிற்றுப் பீதியை உருவாக்கியிருக்கிறார்கள் மணல் கொள்ளையர்கள்.
 

 

 

இந்த அளவுக்கு தாமிரபரணி, நம்பியாறு, பச்சையாறு ஆற்றுப்படுகைகளின் மணல்குன்றுகள் மாஃபியாக்களை வளர்த்துள்ளன. 
 

விஜயநாராயணம் அருகில் உள்ள பரப்பாடி, மற்றும் ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படைத்தளம் அருகில் நம்பியாறு ஓடுகிறது. மணல்குன்றுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அதனருகில் உள்ள பாண்டிச்சேரி, தாமரைக்குளம், அணைக்கரை, மிட்டாதார்குளம்  கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆற்றுப்படுகைகளில் திருட்டு மணல் அள்ளுபவர்கள். அரசியல் போர்வைக்குள் அதன் பாதுகாப்போடு கொள்ளையை நடத்துகிறார்கள். 
 

இதனால் நடவடிக்கைக்குப் பயந்து காவல் நிலையங்கள், வருவாய்த்துறை கூட வேண்டாம் வம்பு, கிடைத்தவரை போதும் என்று அவர்களோடு மாமூல் கள்ள உறவை ஏற்படுத்திக் கொண்டு, திருட்டுத் தொழிலுக்கு உரமாகியிருக்கிறது. இதற்கு மணல் குன்றுகளின் காவல்நிலையங்கள் கூட விதிவிலக்கல்ல.
 

இந்தச் சூழலில் விஜயநாராயணம் காவல் நிலைய மாவட்ட எஸ்.பி.யின் தனிப்பிரிவிற்குத் தகவல் கொடுக்கும் ஏட்டு ஜெகதீஸ்துரைக்கு, மே 6 அன்று நடு இரவில் திருட்டு மணல் அள்ளுகிறார்கள் என்கிற தகவல் வர அந்த நள்ளிரவில் அங்கே போயிருக்கிறார். பாண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தன் டிராக்டரில் நான்கைந்து பேர்களைக் கொண்டு திருட்டு மணல் அள்ளிக் கொண்டிருப்பதைக் கண்டவர், அவர்களைத் தடுத்திருக்கிறார். உடன் இதுபற்றி விஜயநாராயணம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். 
 

போலீசைக் கண்டதும் மணல் அள்ளுபவர்கள் தப்பியோடினர். அப்போது மணல் புள்ளி ஒருவர், மாமூல் வாங்கிக் கொண்டு ஏன் தடுக்குறீர்கள் எத்தனை பேருக்குத்தான் மாமூல் தருவது என்று வாக்குவாதம் நடத்தியிருக்கிறார். அவரோடு பதில் வாக்குவாதம் செய்திருக்கிறார் ஏட்டு. அவரைத் தடுத்த மணல் புள்ளி மணலோடு டிராக்டரைக் கிளப்பியிருக்கிறார். அதனை வழிமறித்து நின்ற ஏட்டு ஜெகதீஸை ஆத்திரத்தில் டிராக்டரில் கிடந்த இரும்பு லீவரால் மண்டையில் ஒரே அடி அடிக்க, மண்டை பிளக்கப்பட்டு ரத்தம் கொட்ட ஸ்பாட்டிலேயே ஏட்டுவின் முச்சு அடங்கியிருக்கிறது. மணல் கொள்ளையர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட எஸ்.பி.யான அருண் சக்திகுமார் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியிருக்கிறார். 
 

இங்கு மணல் கொள்ளை அதிகம். இந்தப் படுகொலை அவர்களுக்குப் புதிதல்ல. இதற்கு முன்பு இது போன்று நடந்துள்ளன. அவைகள் போலீஸ், மணல் மாஃபியாக்கள் கூட்டணி காரணமாக கொலைகள், விபத்து என்று எப்.ஐ.ஆர். ஆகி மூடப்பட்டுள்ளன. விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு மாமூல் முறையாகப் போகிறது என்கிற கனமான பேச்சும் அந்தப் பக்கம் சுற்றுகிறது.
 

ஏட்டு கொலை காரணமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேரைத் தேடுகிறார்கள். நான்கு மாத கர்ப்பிணியான ஏட்டு மனைவி மரிய ரோஸ்மார்க்கரெட் எம்.காம்.,எம்.எட்., படித்தவர் தன் கணவரின் உடலைப் பார்த்து மயங்கி சரிந்தார்.
 

குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை பெற்றுத்தர வலுவான காரணங்களைச் சேகரித்து வருகிறோம். மணல் கொள்ளையைத் தடுக்க தனி செல் அமைக்கப்படும் என்கிறார் எஸ்.பி.யான அருண் சக்திகுமார்.
 

மணல் மாமூல்கள் ஒழிக்கப்படும்வரை மணல் படுகொலைகளுக்கு ஃபுல்ஸ்டாப் இல்லைதான். குற்றத்தின் ஆணிவேரே இதுதான்.

சார்ந்த செய்திகள்