Skip to main content

ஜாமீனில் வெளிவந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

The person who was released on bail and was involved in a series of robberies ..!

 

பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபநாட்களாக தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் என பல இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல், மங்கலமேடு பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூமில் கொள்ளை, அன்னமங்கலம் கிராமத்தில் ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, ரஞ்சன்குடி என்ற ஊரில் இரு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, அரும்பாவூர் பகுதியில் கொள்ளை எனத் தொடர் கொள்ளையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் அச்சத்திலிருந்தனர். அதேநேரம் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வந்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்டம் முழுக்க கடும் சோதனை செய்யப்பட்டது.


மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன், டி.எஸ்.பி. சரவணன், அரும்பாவூர் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், காவலர்கள் லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோர் அரும்பாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவர் தப்பி ஓட, அவரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். மேலும் பிடிபட்ட அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 22 வயது விஜய் என்பதும் இவர் மேற்படி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 
 

அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை செய்ததில் இவர் சேலம், ஆத்தூர் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர், பல மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர். இவர், கொள்ளை வழக்கில் சிறை சென்று தற்போது சிறையிலிருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

இந்த நிலையில், பெரம்பலூர் டவுனில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், கணபதி என்ற திருடனை கைது செய்துள்ளனர். இப்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட மக்களைச் சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்