Skip to main content

மதச்சார்பின்மைக்கான அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் - நீதிபதி கருத்து

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
court

தமிழகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை என்ற அமைப்பு சார்பில்  மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்து மார்ச் 23 ஆம் தேதிக்குள்  காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சுதந்திர போராட்ட தியாகிகளான பகத் சிங், ராஜ குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாட்களை முன்னிட்டு சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அமைதி, ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி அணிவகுப்பு நடத்த "பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை" அமைப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

 


இதையடுத்து, அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி இந்த அமைப்பை சேர்ந்த சிரிலா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, தமிழகத்தில் ரத யாத்திரை நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கும் காவல்துறை, தங்களுடைய அமைப்புக்கு அனுமதி வழங்க மறுப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என  மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் வாதிட்டார்.

 

இதையடுத்து, அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதி, அணிவகுப்புக்கு நடத்துவதற்கான நிபந்தனைகளை மார்ச் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியலமைப்பின் முன்னுரையில்  ‘மதச்சார்பற்ற, சோசியலிசம்’ இல்லை; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Congress MP Accusation on the Preamble of the Constitution does not contain 'Secular, Socialism'

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்றது.

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில்  நேற்று (19-09-23) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில், சோனியா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நேற்று (19-09-23) புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ , மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்திரி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்திரி, “ எங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நகல்களை கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தோம். ஆனால், அந்த நகலின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் இல்லை. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டியிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. மத்திய அரசு இந்த மாற்றத்தை மிகவும் புத்திசாலித்தனமாக செய்துள்ளனர். மேலும், அவர்களின் நோக்கம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

 

 

Next Story

75வது குடியரசு தின விழா; மத்திய அரசின் புதிய முன்னெடுப்பு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

upcoming republic day parade women participate only 

 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்.

 

இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் இந்த குடியரசு தினமானது வைர விழாவாகக் கொண்டாடப்படும் வேளையில் இந்த விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ இசைக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பு என அனைத்து நிகழ்வுகளும் பெண் அதிகாரிகள் தலைமையில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பு திட்டமிடல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முப்படைகளுக்கும் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.