Skip to main content

தொடரும் பேச்சுவார்த்தை - கூட்டணி நிலவர அப்டேட்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், அதிமுகவால் தற்போது வரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம் விரைவில் திமுகவிடம் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்திருந்த நிலையில் தேமுதிக 7 தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் அதிமுக 4 நான்கு இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அதிமுகவிடம் பாமக 10 தொகுதிகளை கேட்பதாகவும் அதிமுக 7 தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிக, பாமக ஆகிய இரண்டும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியைக் கேட்பதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளை தமாகா கேட்டுள்ளது. மூன்று தொகுதிகளை  கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டணியில் உள்ள தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடத்தை பாஜக ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்து முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்