சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.
அந்த வகையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கமாட்டார்கள். கரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடும் போதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். விஷேச நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை அறிவுறுத்தினார்.