Skip to main content

தோழர் முகிலன் எங்கே? தேடி அலையும் சமூக ஆர்வலர்கள் ! 

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

 

தோழர் முகிலன் தொடர்ச்சியாக மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலைக்கு எதிர்ப்பு போராட்டம், என பொதுமக்களுக்கு ஆதரவாகவும் கார்பரேட் கம்பெனிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் மூலம், போலிசின் தடியடிகளுக்கும் உட்பட்டும் பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டும், குண்டாஸ் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினாலும் தொடர்ச்சியாக மக்களுக்கு ஆதரவாக இவரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட முகிலன் நேற்றிலிருந்து காணவில்லை என்கிற தகவல் பரவி வருகிறது…

 

mu

 

இது குறித்து விசாரிக்கையில் … கடந்த 15.02.19 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் முகிலன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஐ.டி தொழிலாளர் சங்க தலைவர் பரிமளா, பூவுலகு நண்பர்கள் ர.ர.ஸ்ரீனிவாசன் மற்றும் நேர்மை அமைப்பின் நிர்வாகி பங்கேற்றனர்.

 

கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது? , ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன? என்பதை அம்பலப்படுத்தும் காணொளி காட்சிகள் அவை (கீழ்வருமாறு). அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அவர் பதிவிட்டார்.

 

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு இரவு ரயில் மூலம் மதுரை செல்ல புறப்பட்ட தோழர் முகிலன் கடைசியாக இரவு 10.30 மணிக்கு தோழர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரவு 2 மணி போல முகநூலில் பதிவிட்டு இருந்தார். அதற்கு பிறகு இந்நேரம் (17.02.19; 12:30) வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மனைவிக்கு எந்த தகவலும் இதுவரை இல்லை.

 

2012 மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோலவே தோழர்கள் முகிலன், சதீஸ், வன்னியரசு உளவுத்துறையால் கடத்தப்பட்டனர். அப்போது தோழர் முகிலனை 3 நாட்கள் தலைமறைவாக வைத்து, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக எவ்வாறு காவல் துறை திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்தியதால் தோழர் முகிலனை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசும் – காவல் துறையும் செயல்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பதறி போய் தேடி வருகிறார்கள்.   தோழர் முகிலனின் உண்மை நிலை குறித்து தமிழ காவல்துறை உறுதி படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

 

சார்ந்த செய்திகள்