Skip to main content

தேவையான பாலினை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் மு.தொ. நலச் சங்கம் அறிவுறுத்தல்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018
milk




ஏப்ரல் -3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பாலினை முன்னெச்சரிக்கையாக முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவேரி விவகாரத்தில் ஆறு வார காலத்தில் "காவேரி மேலாண்மை வாரியம் "அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு "காவேரி மேலாண்மை வாரியம்" அமைக்க காலம் தாழ்த்தி தமிழகத்திற்கும், தமிழக விவசாய பெருமக்களுக்கும் பெரும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளதோடு, லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றன வகையிலும், 7.5கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமலும் நடந்து கொண்ட மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.கவின் தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், கடந்த ஆறு வார காலத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாக நடந்து கொண்டு தற்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை நிரந்தரமாக பெறுவதற்கு மத்திய அரசு உடனடியாக "காவேரி மேலாண்மை வாரியம் "அமைத்திட வலியுறுத்தியும் வருகின்ற ஏப்ரல் -3ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள "மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பங்கேற்கும்" என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

காவேரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் 

மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டமானது காலை 6.00மணி முதல் மாலை 6.00மணி வரை நடக்கின்ற காரணத்தால் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே உயிர்காக்கும் பொருளாகவும், அத்தியாவசியப் பொருளாகவும் பால் விளங்குகின்ற காரணத்தால் பொதுமக்கள் நலன்கருதி தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்களும் ஏப்ரல் -3ம் தேதியன்று வழக்கமாக பால் விநியோகம் துவங்கும் நேரமான அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரையிலும், அதன் பிறகு மாலை 5.00மணிக்குப் பிறகும் தங்களின் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் விநியோக மையங்களையும் திறந்து வைத்து மக்கள் பணியாற்றுவார்கள் எனவும், இடைப்பட்ட நேரமான காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை தங்களின் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் விநியோக மையங்களை அடைத்து மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை 1.5லட்சம் பால் முகவர்களும் அளிப்பார்கள். அதுமட்டுமன்றி அன்றைய தினம் தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள், வணிகர் நல அமைப்புகள் நடத்துகின்ற அறவழிப் போராட்டங்களில் எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

மேலும் வரும் ஏப்ரல் -3ம் தேதியன்று நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 25லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களும் தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளித்து பங்கேற்க இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து தினசரி கொள்முதல் செய்கின்ற பாலில் சுமார் 40% முதல் 60% வரை அன்றைய தினம் கொள்முதல் செய்ய மாட்டார்கள். அதன் காரணமாக ஏப்ரல் -3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பாலினை முன்னெச்சரிக்கையாக முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்