சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.