Skip to main content

''செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

"Karnataka government is creating an artificial crisis" - Chief Minister's speech in the assembly

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரையை தமிழக முதல்வர் தொடங்கினார். அவரது உரையில், '' இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டும் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு சீரமைக்கப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021-22 ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.

 

இந்த ஆண்டில் ஜூன் ஒன்று நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டி.எம்.சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணையைக் குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சிக்கு மேலாக உள்ளபோது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக இருந்தது. மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம். நமது உழவர் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவை பயிர் இந்த ஆண்டும் சிறப்பாகப் பயிரிட அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடகா மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையைக் காப்பதில் திமுக உறுதியுடன் இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்