Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் சோனியா காந்தி!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
Sonia



மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கலைஞரின் சிலையை திறந்து வைக்கிறார். 
 

அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
 

கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி வரவுள்ளதையொட்டி டெல்லியிலிருந்து மத்திய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆய்வு செய்தனர். 
 

கலைஞர் சிலையை திறக்க வரும் சோனியா காந்தி, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு செல்கிறார். இதனால் அங்கேயும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
 

ஆய்வு செய்த மத்திய உயர் பாதுகாப்பு அதிகாரிகள், மெரினா சாலையிலேயே சோனியாவின் காரை நிறுத்தி, அங்கிருந்து நடந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆகையால் அண்ணா நினைவிடத்திற்கு சற்று உள்ளேயே காரை அனுமதித்து அங்கிருந்து சில நிமிடங்களில் நடந்து சென்று அஞ்சலி செலுத்துவற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

அண்மைக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அண்ணா நினைவிடத்திற்கு வந்தது இல்லை. முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனியாகாந்தி சென்னை வருவதையொட்டி அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்