Skip to main content

ஐரோம் சர்மிளா வழக்கு: பாஸ்போர்ட் அதிகாரி பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
irom


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைக்கான கருத்தரங்கிற்கு செல்ல பாஸ்போர்ட் வழங்க கோரி ஐரோம் சர்மிளா தொடர்ந்த வழக்கில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வரும் இரோம் சான் சர்மிளா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "மனித உரிமை ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலராக உள்ள நான் கொடைக்கானலில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். மணிப்பூர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் மக்களுக்கு எதிரான ஆயுதமேந்திய படைகள் மற்றும் அரசு இயந்திரங்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு, குற்றப்பிரிவு போலீஸார் என் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்தனர்.

இம்பால் கிழக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் மீது வழக்கு தொடர்ந்தார். மணிப்பூர் அரசு என்மீது குற்றவியல் வழக்கு இல்லை என சான்றிதழை வழங்கியது. தற்போது தமிழ்நாட்டில் கொடைக்கானலில் 17.08.2017 அன்று சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் டெஸ்மண்ட் அந்தோனி பெல்லாரெயின் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 2017 அக்டோபர் 16ல் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பித்தேன். தேவையான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து 14.08.2017 அன்று நேர்முக தேர்விற்கும் சென்றிருந்தேன். ஆனால் இதுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெனிவாவில் பிப்ரவரி 26 முதல் ஐ.நா.சபையின் மனித உரிமைக்கான 37ஆவது கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அதில், இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து மார்ச் 23ல் பேசுவதற்காக அழைக்கப்பட்டுள்ளேன்.

அதில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் அவசியம். என்மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லாத நிலையில் பாஸ்போர்ட் வழங்க மறுக்கின்றனர். ஆகவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இது தொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்