Skip to main content

''உண்மையிலேயே நொறுங்கி போயிருக்கிறேன்... இதுவல்ல நாம் காண விரும்பும் சமூகம்''-மு.க.ஸ்டாலின் வேதனை

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

nn

 

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவி, ஒருதலை காதல் பிரச்சனை காரணமாக சதீஸ் என்ற இளைஞரால் பரங்கிமலை ரயில் நிலைய ரயில்வே டிராக்கில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சதீஸிற்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல அதை படித்த, அதை அறிந்த அத்தனைப்பேருமே துக்கத்தில்தான் இருந்திருப்பீர்கள். துயரம் அடைந்திருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக் கூடாது. இதுவல்ல நாம் காண விரும்பக் கூடிய சமூகம். இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்கமும், பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.

 

nn

 

பாடபுத்தக கல்வி மட்டுமல்ல சமூக கல்வி அவசியமானது. தன்னை போலவே பிற உயிரையும் மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து சமூகத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் எந்த வகையிலும் திசைமாறி சென்று விட முடியும். எனவே ஒழுக்கத்துடன் வளர்க்கும் முழுப்பொறுப்பும் பெற்றோருக்குதான் இருக்கிறது. இயற்கையிலே ஆண் வலிமை உடையவனாக இருக்கலாம் அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதற்காக இருக்கக் கூடாது. பெண்களை பாதுகாக்க கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்