Skip to main content

“சட்டம் தடுக்காவிட்டாலும்; நாம் தடுக்க வேண்டும்” - திருமாவளவன் எம்.பி.

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

“Even if the law does not prevent; We must prevent it” - Thirumavalavan MP.

 

போதைக்கு  எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1 கோடி கையெழுத்து  இயக்கம் தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதி விழா நேற்று(16ந் தேதி) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் ம.சுப்பிரமணியன், வி.சி.க. தலைவரும், எம்.பியுமான தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நக்கீரன் ஆசிரியர், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபி நயினார், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

இதில் பேசிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் போதை இல்லாத நாடக மாற வேண்டும். போதை இல்லாத சமூகமாக மாற வேண்டும் என்பது ஒவ்வொருக்குமான கடமையாக உள்ளது.

 

மாநில அரசும், மத்திய அரசும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆனால் போதைப் பொருள் புழுக்கத்தில் இருப்பதைத் தடுக்க முடியவில்லை. மது, புகை இலை பொருட்களின் மீது எச்சரிக்கை வாசகங்களைப் பதிவு செய்தும் விற்பனை நடைபெறுகிறது. திரைப்படங்களில் அந்த காட்சியை அமைக்கக் கூடாது. ஆனால் மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்ற வாசகத்தை போட்டுக் கொண்டால் மது பயன்பாடு காட்சிகளை காட்டலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட சமரச போக்கு மேல் இருந்து கீழ் வரை உள்ளது. தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தும் அதை தடுக்க முடியவில்லை.

 

அரசு ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும் அதை மூடுவது தான் சரி என்று விவாதித்தால், அரசு மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும், உயிரிழப்பு ஏற்படும். அதில் இருந்து காப்பற்றத் தான் மதுக்கடைகளை திறக்கிறது என்ற நியாயம் சொல்லப்படுகிறது. 

 

ஒரு மாநிலத்தில் மட்டும் மது விளக்குக் கொள்கை அல்லது போதை விளக்கக் கொள்கை நடைமுறையில் இருந்தால் அதை அந்த மாநிலத்தில் நீட்டிக்க முடியாது. அது சிக்கலுக்கு உள்ளாகும். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் அது நடைமுறைக்கு வர வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள், உலகளாவிய அளவில் தடுத்தால் தான் இந்தியாவில் தடுக்க முடியும் என்று சொல்வார்கள். போதைப் பொருள் வியாபாரம் என்பது உலகளாவிய மாபியாக்கள் கையில் உள்ளது. அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும். 

 

இன்று இளம் தலைமுறையினர் போதைப் பொருளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதை கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய பேர் திருமணம் செய்ய முடியாமல் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழல் உள்ளது. அனைத்து வகை போதைப் பொருள் பழக்கத்தில் இருந்தும் மக்கள் மற்றும் இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். 

 

1 கோடி கையெழுத்து கோரிக்கையை முதல்வரிடம் கொடுக்க உள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை வைக்க உள்ளது. அரசு செய்கிறதோ இல்லையோ நாம் செய்தாக வேண்டும். சட்டம் தடுக்கிறதோ இல்லையோ நாம் தடுத்தாக வேண்டும். ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்ககூடியவை ஒன்று சாதி. அதை ஒழித்தாக்க வேண்டும். அதேபோல் போதை; அதை முற்றிலும் அழிக்க வேண்டும்” என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்