Skip to main content

கல்குவாரி வேலை நிறுத்தம்; உடனடி தீர்வுக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 .EPS insists on immediate settlement of Kalquarie strike

 

கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்த விதமான அரசியல் குறுக்கீடுகளுமின்றி கிரஷர் மற்றும் கல் குவாரிகள் சுதந்திரமாக இயங்கி வந்தன. குறிப்பாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது தலைமையிலான அரசு கட்டுமானப் பணிகளுக்கு எம். சாண்ட்-ஐ பயன்படுத்த ஊக்குவித்தது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும்; குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்று குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால், தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் குவாரி தொழிலை நம்பியுள்ள லாரி தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும்; வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையை சரிசெய்ய, பல்வேறு கனிமவள விதிகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும். அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசைத் தொழில்களுக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களே வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த ஆட்சியில், குவாரி லைசென்ஸ் புதுப்பிக்க காலதாமதம் ஆகின்றன. எனவே, காலதாமதமின்றி விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரான்சிட் பாஸ் மற்றும் ஸ்டாக் யார்டு நடைமுறையை நீக்க வேண்டும்.

 

அரசு புறம்போக்கு நிலங்களை ஏலம் விடும்போது, தற்போதுள்ள நடைமுறைப்படி குவாரிக்கு உண்டான சுற்றுச் சூழல் அனுமதி மற்றும் வரைபட பிளான் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கல் குவாரி உரிமையாளர்கள் திமுக அரசிடம் முன்வைத்துள்ளனர். மக்கள் நல அரசு என்பது, நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காகவும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அரசின் வழிமுறைகளும், நெறிமுறைகளும் மக்களின் கழுத்தை நெறிக்குமாறு இருக்கக்கூடாது. ஆனால், இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் குரல்வளையை இழுத்துப் பிடிக்கும் அளவுக்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் ஒரு சிலருக்கு அதே சட்ட திட்டங்கள் வானளவு வளைக்கப்படுகிறது. உதாரணமாக, இரவு 12 மணியளவில் அரசின் பதிவுத் துறை அலுவலகம் திறக்கப்பட்டு பத்திரப் பதிவு பணிகள் நடைபெறுவதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. கடந்த சில நாட்களாக, திமுக அரசின் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, தொழிலை முடக்கும் விதமாக நியாயமின்றி அபராதம் விதிக்கும் போக்கு தொடங்கி உள்ளதாகவும்; அதனை எதிர்த்தே தற்போது தாங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம் என்று குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், கல்குவாரி தொழில் செய்வோர், துறை அமைச்சர்களை சந்திக்க நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறியதாக செய்திகள் மூலம் தெரிய வருகின்றன. GST வரி விதிப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான வரியினை அரசுக்குச் செலுத்தி, பயமின்றி வணிகம் செய்து வருகின்றனர். அதேபோல், மாநில அரசும் கல் குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நிம்மதியாக, நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது, டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியினை இந்த திமுக அரசு வழங்காததால், சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்டு, அதன் வருமானம் தனிப்பட்ட ஒரு சிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றதுபோல், குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்.

 

கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும். இதனால், வீடு உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் தடையின்றி நடைபெறும். தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இந்த திமுக அரசு, குறிப்பாக கனிம வளத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்