Skip to main content

திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சொன்ன பிறகும் அதிமுக வாய் திறக்கவில்லையே? ஸ்டாலின் பேட்டி

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
stalin interview

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின்  இன்று (17-03-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 
செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக நீங்கள் சொன்ன பிறகும் அதிமுக வாய் திறக்கவில்லையே?
 
ஸ்டாலின்: ஆட்சியில் இருப்பவர்கள் தான் இதனை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆனால், இதுவரையிலும் அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையிலும் இதற்காக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

 

செய்தியாளர்: பிரதமர் மோடியை திமுக சார்பில் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படுமா?

 ஸ்டாலின்: பிரதமரை சந்திக்க வேண்டுமென்று ஆளும் கட்சி கேட்டதற்கே இதுவரை அழைப்பு வரவில்லை எனும்போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்து விடுவார்களா? ஏற்கனவே, விவசாயிகள் பிரச்னை, நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க நான் பலமுறை நேரம் கேட்டிருக்கிறேன். டெல்லிக்கு நேரடியாக சென்றபோதும் அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அப்போதெல்லாம் கூட மறுக்கப்பட்டு விட்டது. சந்திப்பது தவிர்க்கப்பட்டது. எனவே, இப்போது முதலமைச்சருக்கு அனுமதி கிடைக்காதபோது, எதிர்க்கட்சிகளுக்கும் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்காது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

 

செய்தியாளர்: ஆந்திர முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக துணிச்சலுடன் இருக்கும்போது, தமிழக முதல்வருக்கு இல்லையே?

ஸ்டாலின்: அதைத்தான் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இருக்கின்ற உணர்வு, பற்று, துணிவு, ரோஷம் ஆகியவற்றில் ஒரு துளியளவாவது இன்றைக்கு தமிழ்நாட்டில் ‘குதிரை பேர’ ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால், அது இருப்பதாக தெரியவில்லை.

 
செய்தியாளர்: திராவிட நாடு பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களே?
 
ஸ்டாலின்: நேற்றைய தினம், ஈரோடு மண்டல திமுக மாநாட்டு திடலை பார்வையிட சென்றபோது, “தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு கொள்கையை கொண்டு வருவதுபோல ஒரு தோற்றம் வந்திருக்கிறதே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்தபோது, ”அப்படியொரு சூழ்நிலை வந்தால் வரவேற்போம்”, என்று தெரிவித்தேன். ஆனால், திராவிட நாடு கோரிக்கையை பொறுத்தவரையில், அதனை பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு கைவிட்டபோதே, ”திராவிட நாடு கொள்கையை கைவிட்டு இருக்கிறோமே தவிர, அதற்கான காரண, காரியங்கள் அப்படியே இருக்கின்றன”, என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது தெரிகிறது. தென் மாநிலங்கள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியால் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்கிறது.

ஆனால், செய்தியாளர்களின் கேள்விக்கு நான் பதிலளித்ததை, நான் என்னவோ திராவிட நாடு கேட்டது போலவும், அதற்காக நாங்கள் குரல் கொடுப்பது போலவும், அதனை ஆதரிப்பது போலவும், மீடியாக்கள் தங்களுடைய விளம்பரத்துக்காக ஒரு மிகப்பெரிய பிரசாரத்தை தொடங்கி, நடத்திக் கொண்டிருக்கின்றன.

 
செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கேள்விக்குறியாக இருக்கிறதா?

 ஸ்டாலின்: நிச்சயமாக கேள்விக்குறியாகவே உள்ளது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் கூட நான் இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அதனால் தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும், அதனை முன்னெடுக்க அரசு முன்வரவேண்டும், அப்படியொரு நடவடிக்கை எடுக்கின்றபோது, எதிர் கட்சியாக இருக்கின்ற திமுக அதனை பின் தொடர நிச்சயமாக தயாராக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறேன்.


 

சார்ந்த செய்திகள்