Skip to main content

6 ஆவது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Court extends custody to Senthilbalaji for 6th time

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிமன்றம், அவருக்கான நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 15 ஆம் தேதியான வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தை முன் வைக்கையில், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆண்டில் இருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளனர். ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்த பின்னர் அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும்” என வாதிட்டார்.

 

இவ்வாறு ஜாமீன் மனு மீதான விவாதங்கள் நிறைவடைந்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி அறிவித்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14 நாட்களுக்கு செப்.29 ஆம் தேதி வரை நீட்டித்தார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 6 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்