Skip to main content

தென் மாவட்டங்களுக்கு விரைந்த கடலோர காவல் படையினர்!

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Coast Guard rushed to southern districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மீட்புப் பணியில் ஈடுபடச் சென்னை மாநகராட்சியில் இருந்து 4 குழுக்களாக 16 பொறியாளர்கள் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் மண்டபம் கடலோர காவல்படை தளத்தில் இருந்து வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு கடலோர காவல்படையினர் விரைந்துள்ளனர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குக் கூடுதல் பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி மீட்புப் பணிக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 3 ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படையின் 3 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் மற்றும் வெலிங்டனில் இருந்த 2 ரணுவ குழுக்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணிக்காக கடலோர காவல்படையின் ஒரு கப்பல் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்