Skip to main content

8 பிரிவுகளில் வழக்கு... சிவசங்கர் பாபா மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்! 

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

Case in 8 sections ... Case against Sivasankar Baba transferred to CPCID!

 

ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியான நிலையில் தற்பொழுது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

 

முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  அதனைத் தொடர்ந்து  கடந்த 11ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஆஜராகினர். இதில் சிவசங்கருக்கு பதிலாக அவர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகினார். 

 

நெஞ்சுவலி காரணமாக 9ஆம் தேதியே டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர் எனவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவின்கீழ் சிவசங்கர் பாபா உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தப் புகார்கள் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் பணியில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படுவதற்கு முக்கிய காரணம் சிவசங்கர் பாபா உத்தரகண்டில் உள்ள டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே வேறு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்தக் கூடிய சூழ்நிலை இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் பிரிவுகள் என மூன்று வழக்குகள் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கு தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவிகளுக்கு வீடியோ சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மெசேஞ்சர் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சில ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் தற்போது விசாரணை சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்