Skip to main content

’’போங்கடா.. நீங்களும், உங்க மாவட்ட நிர்வாகமும்..” -விருதுநகரில் கொந்தளித்த விவசாயிகள்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
aar

 

கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்று கூறிய மகாத்மா காந்தியின் படத்தை அத்தனை அரசு அலுவலகங்களிலும் வைத்திருக்கிறார்கள். விவசாயம் சார்ந்ததாக கிராமங்கள் இருந்ததால்தான், மகாத்மாவின் கருத்து அப்படி இருந்திருக்கிறது. அவரது கொள்கைக்கு – கிராமங்களுக்கு – விவசாயத்துக்கு – விவசாயிகளுக்கு,  அரசு அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா என்று பார்த்தால், உதட்டைத்தான் பிதுக்க வேண்டியதிருக்கிறது.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்,   விவசாயிகளை ஒரு பொருட்டாகக் கருதாததால், அவர்கள் கொந்தளித்த சம்பவம் இன்று விருதுநகரில் நடந்தது.    

 

salai

 

2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு, இழப்பீடு தொகையை, இதுவரை வழங்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழ் விவசாயிகள் சங்கம். இதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனு கொடுப்பதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களைக் காத்திருக்கச் சொன்ன ஆட்சியரின் தனி உதவியாளர், ஆட்சியர் சிவஞானத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்திருக்கும் விபரத்தைக் கூறியிருக்கிறார்.  ‘இன்று விவசாயிகளைச் சந்திப்பதற்கு நேரம் இல்லை’ என்று சிவஞானம் கூறிவிட, விவசாயிகளை வெளியேறச் சொன்னார் அந்தத் தனி உதவியாளர். 

 

ias

 

ஆட்சியர், தங்களை அலட்சியம் செய்து, அவமானப்படுத்தியதால் வெகுண்ட விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி,   சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து,  சாலை மறியலைக் கைவிட்டு, மனு கொடுப்பதற்கு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் நுழைந்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு,  மெயின் கேட்டைப் பூட்டியிருந்தனர். தங்களுக்கு எதிரான மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாட்டை அறிந்த விவசாயிகள், “போங்கடா.. நீங்களும் உங்க மாவட்ட நிர்வாகமும்” என்று வெறுத்துப்போய் கோஷமிட்டு,  கோரிக்கை மனுவை அங்கேயே கிழித்தெறிந்தனர். 

 

விருதுநகர் மாவட்ட நிர்வாகம்  மட்டுமல்ல,  பாரதப் பிரதமரே, அட,  இந்திய தேசமே, விவசாயிகளின் கண்ணீருக்கும், போராட்டத்துக்கும் மதிப்பளிக்காததால் -  உரிய கவனம் செலுத்தாததால் -  அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருக்கிறது.  

சார்ந்த செய்திகள்