Skip to main content

பல் பிடுங்கிய விவகாரம்; விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Balvir Singh issue Amuda IAS as Inquiry Officer

 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது. மேலும், இந்நிகழ்வில், பல்வீர் சிங் 29.03.2023 பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 

மேற்படி புகார்கள் தொடர்பாக சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை கடந்த 3 ஆம் தேதி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04 ஆம் தேதி கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்திருந்தார்.  

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்