Skip to main content

"தேர்தல் புறக்கணிப்பு - ஆண்டிபட்டி  விவசாயிகள் சங்கம் அறிவிப்பு"

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் 30 கிராம பஞ்சாயத்து 152 கிராம பகுதிக்கு முல்லைப் பெரியார் தண்ணீரை குழாய் மூலமாக கண்மாய், குளம், ஊரணிகளில் நிரப்பி நிலத்தடி நீர் ஆதாரம் உருவாக்கும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆண்டிபட்டி விவசாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

 

andipatti farmers



முல்லைப் பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணை தான் முல்லைப் பெரியாறு. இந்தணை தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இவ்வணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளவுக்கு உரிமையானதாக இருந்தாலும், அந்தணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகின்றது.

இவ்வணையை 1895 ஆம் ஆண்டு கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி உயரம் 155 அடி, இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் வன சரணாலயம் தக்கடி அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 208144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர்,கம்பம்,சின்னமனூர் மற்றும் தேனி- அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும் இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.
 

mullai periyar dam



இது தவிர மதுரை மாநகராட்சிகளின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி,வாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்த்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் ஆண்டிபட்டி தொகுதியில் பெரும்பாளான இடங்களுக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுச் செல்வதில்லை. அப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான். பூக்கள்,காய்கனிகள் மற்றும் நீண்டகால பயிர்கள் என விதவிதமாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்விசாயம் நிலங்கள் அனைத்தும் நிலத்தடி நீர் மற்றும் இயற்கையை எதிர்பார்தே அமைந்துள்ளது.

கோடை காலங்களில் பெரும் வறச்சிச் சூழலை ஏற்படுத்துவதனால் விவசாயிகள் இடம் பெயர்ந்து வருமானத்தை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.எட்டிப்பார்க்கும் தூரத்தில் முல்லைப் பெரியாறு தண்ணீர் ஓடுகின்றது ஆனால் பயன்ஏதுமில்லை. இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிதண்ணீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சனையை பல்வேறு போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி பயனில்லை என்று அறிந்த பொது மக்கள் மற்றும் மலர் விவசாயம் மற்றும் அனைத்து விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் போன்ற சங்கங்களும் இணைந்து வருகின்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இத்தேர்தலில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சரின் மகன் ஓ.பி.இரவிந்திரநாத் குமார், திமுக சார்பில் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் முக்கிய தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,அமமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன், ஆகிய மூன்று அரசியல் பிரதான தலைவர் போட்டியிடும் தொகுதி என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பா.விக்னேஷ்பெருமாள்

சார்ந்த செய்திகள்