Skip to main content

நாம் செய்த மிகப்பெரிய தவறு... பாஜக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு...

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்தது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ஓ.ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


 

 

bjp tamilnadu



அகில இந்திய அளவில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் மட்டும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் தமிழிசை சௌந்திரராஜன், முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசும்போது, மோடிக்கு எதிராக தமிழகத்தில் சிலர் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தனர். இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. நாம் செய்த மிகப்பெரிய தவறு, கடைசி கட்டத்தில் கூட்டணி அமைத்தது. முன்கூட்டியே கூட்டணி அமைத்திருந்தால் பிரச்சாரம் செய்யவும் நேரம் போதுமானதாக இருந்திருக்கும், கூட்டணி அமையும் வரை அதிமுகவில் உள்ள அமைச்சர்களே சிலர் பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனம் வைத்தனர். 


 

 

பாமகவும் அதிமுக மீது கடும் விமர்சனம் வைத்தது. தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு அரசுகளை குறை கூறியது. கடைசி கட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்தது. தேமுதிகவும் அதிமுக மீது கடும் விமர்சனம் வைத்தது. கடைசி நேரத்தில் கூட்டணியில் இணைந்தது. இதனையும் மக்கள் ஏற்கவில்லை. அதிமுக, பாமக, தேமுதிகவும் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளன. ஆகையால் இதனை பாஜகவுக்கான தோல்வி என எடுத்துக்கொள்ள முடியாது. கட்சியை பலப்படுத்த மாநில நிர்வாகிகள், தேசிய நிர்வாகிகளை அழைத்து வந்து மாநிலம் முழுவதும் கட்சியினரை சந்திக்க வேண்டும் என விவாதித்ததாக கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்