Skip to main content

தொகுதியை அறிவோம்... விருதுநகர்...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

இப்போதுதான் விருதுநகர். இதற்குமுன் சிவகாசி. ஆம். சிவகாசி மக்களவைத் தொகுதிதான், தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் விருதுநகர் மக்களவைத் தொகுதியானது. விருதுநகர் தொகுதி குறித்த அலசல் என்று வரும்போது, பழைய சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி.க்களாக பாராளுமன்றம் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

 

virudhunagar

 

சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி) ஆகியவை சிவகாசி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்ற தொகுதிகள். விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாறியபின், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி தொகுதிகள் வேறு தொகுதிகளுக்குப் போய்விட்டன. தற்போதைய விருதுநகர் மக்களவைத் தொகுதியில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 
 

இத்தனை எம்.பி.க்களும் என்ன செய்தார்கள்?
 

சரி, சிவகாசி மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து  இதுவரை டெல்லி சென்ற எம்.பி.க்களையும் அவர்கள் தொகுதிக்கு ஆற்றிய சேவைகளையும் பார்ப்போம்!
 

jayalakshmi

 

1967-71 காலகட்டத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது சுதந்திரா கட்சி. அப்போது நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி சார்பில் சென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. சிவகாசி மக்களைவைத் தொகுதியும் 1967-ல் சுதந்திராக கட்சி எம்.பி.யாக ராமமூர்த்தியை அனுப்பியது. ஜெயலட்சுமி, 1971 மற்றும் 1977 மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று, இரண்டு தடவை காங்கிரஸ் எம்.பி. ஆனார். அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கமானவராக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.சி.யாகவும் இருந்தார். 1980 மற்றும் 1984-ல் அதிமுக எம்.பி.யாக, சௌந்தரராஜனை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள் சிவகாசி தொகுதி மக்கள்.  1989-ல் காளிமுத்துவும், 1991-ல் கோவிந்தராஜுலுவும் அதிமுக எம்.பி.க்களாக டெல்லி சென்றனர். 1996-ல் சிபிஐ எம்.பி. ஆனார் அழகிரிசாமி. 1998 மற்றும் 1999-ல் வைகோவும், 2004-ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் மதிமுக எம்.பி.க்கள் ஆனார்கள். 2009-ல் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் எம்.பி. ஆனார். 2014-ல் அதிமுக எம்.பி. ஆகி பாராளுமன்றம் போனார் ராதாகிருஷ்ணன். 

 

காலம்காலமாக, பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில் அடங்கிய ஊர்களே. ஆனாலும், அப்போதெல்லாம் எம்.பி.க்கள் யாரும் தொகுதியின் முன்னேற்றத்தில் போதிய கவனம் செலுத்தியதில்லை. சிட்டிங் அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணனும் அந்த வகைதான். இத்தகையவர்களை பொம்மை எம்.பி.க்கள் என்றே வரலாறு பதிவு செய்திருக்கிறது. 

 

வைகோவும் மாணிக்கம் தாகூரும் ஓகே!
 

அதே நேரத்தில், தொகுதியில் எம்.பி.க்கென்று அலுவலகம் அமைத்து, சிறப்பாகச் செயல்பட்டவர்கள் என்றால், வைகோவும் மாணிக்கம் தாகூரும்தான். 

 

vaiko

 

விருதுநகர் – செங்கோட்டை அகல ரயில்பாதை, விருதுநகர் மேம்பாலம், மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம், கண் சிகிச்சை முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைச் சிகிச்சை முகாம் என்பதெல்லாம் வைகோ நிகழ்த்திய சாதனைகளே! மாணிக்கம் தாகூரும்  ‘ஆக்டிவ்’ எம்.பி.யாக தொகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவரே. விருதுநகர் – மானாமதுரை அகல ரயில்பாதை வந்ததற்கு இவருடைய பங்களிப்பு அதிகம்.  

 

manikam

 

தொழில் நிமித்தம் ரயிலில் செல்பவர்களுக்கு  சலுகைக் கட்டண அட்டைகளைத்  தாராளமாகக் கிடைக்கச் செய்தார். பட்டாசு ஆலை விபத்துக்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தபோது, இறந்தவர்களுக்கும் காயம் பட்டவர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கச் செய்தார். இவருடைய முயற்சியால்தான், விருதுநகருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் வந்தன. மாணவர்களுக்காக கல்விக்கடன் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். 
 

தீர்க்கப்படாத பிரச்சனைகள்!


விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பேனா-நிப் தொழில்,  தீப்பெட்டி தொழில், அச்சுத்தொழிலெல்லாம் நலிவடைந்து போய்விட்டன. தொழிலாளர்களைப் போலவே, பட்டாசுத் தொழிலும் நித்தமும் செத்துப் பிழைக்கிறது. அதனால், வேலை இழந்த இத்தொகுதி மக்கள்,  வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசு உதவியுடன் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை,  ரூ.550 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்ற தொழில்துறையின் அறிவிப்பெல்லாம் பல ஆண்டுகளாகக் கிடப்பிலேயே கிடக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் யாரும், இதுபோன்ற தொகுதியின் பிரதான பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது இல்லை. 
 

பழைய ஃபார்முலா கிலி!
 

தற்போது, விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஐந்து முறை வென்ற இத்தொகுதியை, தேமுதிக தந்த அழுத்தத்தால், விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்ற புதுமுகத்தை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது தேமுதிக.

 

alagarsamy

 

கேப்டன் ரசிகர் மன்ற கிளைப் பொறுப்பிலிருந்து, படிப்படியாக வளர்ந்து விசாரணைக்குழு உறுப்பினர் வரை ஆகியிருக்கிறார் அழகர்சாமி. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் மாணிக்கம் தாகூர். 


இத்தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 7,14,606, பெண் வாக்காளர்கள் 7,44,588, மற்றவர்கள் 122 என மொத்தம் 14,59,316 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 
 

கட்சிகளின் வாக்கு வங்கி, சாதி பலம், பணபலம் போன்றவை, வேட்பாளரின் வெற்றிக்கான பொதுவான கணக்காகப் பார்க்கப்பட்டாலும், உச்சக்கட்ட பட்டுவாடாவில் முந்துபவருக்கே வெற்றிக்கனி என்ற இத்தொகுதியின் பழைய ஃபார்முலா,  தேர்தல் நாள் வரையிலும் எல்லா வேட்பாளர்களுக்கும் கிலி ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்