Skip to main content

த.மு.மு.க.வின் வெள்ளி விழா மாநாடு! ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்பு! 

Published on 05/09/2020 | Edited on 05/09/2020
jawahirullah

 

 

1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் தொடங்கப்பட்டு 2020- ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.

 

இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை 6-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 

கரோனா நோய்ப் பரவல் காரணமாகவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இணையம் வழியாகவே இம்மாநாட்டை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

 

இரண்டு அமர்வாக நடைபெறவிருக்கும் இந்த இணைய வழி வெள்ளி விழா மாநாட்டில், மாலை 7 முதல் 10 மணி வரை த.மு.மு.க. தலைவர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறவுள்ள எழுச்சி அரங்கத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கையின் முன்னாள் மத்திய அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ் புலிகள் இயக்க தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் சிறைப்புரையாற்றகின்றனர்.

 

அதேபோல்,  தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா தலைமையில் காலை10.30 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ள முதல் அமர்வில் , நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எம். பஷீர் அஹ்மது, மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஜமாத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ரூஹீல் ஹக், பேரா. அ.மார்க்ஸ், பேரா. அருணன், மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் மவ்லவி ஹனிபா, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மேஜர் சையத் சஹாபுதீன், ஊடகவியலாளர்கள் வீரபாண்டியன், ஜென்ராம், ஆர்.நூருல்லா, டி.எஸ்.எஸ். மணி மற்றும் தோழமை இயக்கத்தின் இயக்குநர் அ.தேவநேயன் ஆகியோர்  பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

 

இந்த நிகழ்வை www.tmmk.in என்ற இணையதளத்திலும், TMMK MEDIA  என்ற பெயரில் உள்ள யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேரலை செய்ய த.மு.மு.க.வின் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஒருங்கிணைத்துள்ளனர். 

 

தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்கும் வகையில், ஒரு அரசியல் கட்சின் வெள்ளி விழா மாநாடு இணைய வழி மூலம் நடப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் த.மு.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்