Skip to main content

அமைச்சரவையில் இடம்பெறாத திருப்பத்தூர் மாவட்டம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Tirupathur district not included in the cabinet

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், மே 7 ஆம் தேதி எளிமையான முறையில் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். அதேபோல் அவரது தலைமையிலான 34 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார்.

 

யாரை அமைச்சராக்க வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவரை அமைச்சராக்கி அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். தற்போது வெளியாகியுள்ள அமைச்சரவைப் பட்டியில் கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பத்தூர் மாவட்டங்கள் எனச் சில மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவமில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உருவான திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒருவரைக்கூட அமைச்சரவையில் சேர்க்கவில்லை. இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளை திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் வீரமணியை திமுகவை சேர்ந்த தேவராஜ் தோற்கடித்து எம்.எல்.ஏவாகியுள்ளார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக திருப்பத்தூர் தொகுதியில் திமுக நல்லதம்பி வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகியுள்ளார். 2019ல் எம்.எல்.ஏ இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வில்வநாதன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர்களில் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் என்கிற குரல்கள் சமூக வலைத்தளங்கள், கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் எழுந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்