Skip to main content

டி.ஆர்.பாலுவுக்கு திமுகவில் உயரிய பதவி!!! துரைமுருகன் இடத்தில்...!!!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

 

திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது திமுக தலைமை! பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவை வருகிற 29-ந்தேதி தனது தலைமையில் கூட்டியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

 

trbaalu



        

இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட பலரும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து காய்களை நகர்த்தியபடி இருந்தார் துரைமுருகன். இவரிடம் பொதுச்செயலாளர் பதவி தஞ்சமடைந்து விடக்கூடாது என அவருக்கு எதிராக மூத்த தலைவர்கள் சிலர் பல்வேறு லாபிகள் மூலம் கச்சைக்கட்டியதும் நடந்தது. மு.க.ஸ்டாலினிடமே லாபிகள் தங்களது அஸ்திரங்களைச் சுழற்ற, அவர்களிடம் கடுமையாக கோபித்துக்கொண்டார் ஸ்டாலின்.

       

இந்த சூழலில், பொருளாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக ஸ்டாலினுக்கு கடிதம் தந்திருக்கிறார் துரைமுருகன். ஸ்டாலினும் அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனால், ஸ்டாலினின் விருப்பத்தின்படியே துரைமுருகன் விலகியுள்ளார் என்கிற பரபரப்பு திமுக மேலிடங்களில் எதிரொலிக்கிறது. இதனால் 29-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் புதியவர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். பொதுச் செயலாளராக போட்டியின்றி துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. 

 

mks



          

 

பொருளாளர் பதவியிலிருந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இடமாறுவதால், அவர் வகித்த பொருளாளர் பதவியை குறிவைத்து தற்போது போட்டிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்களிடையே போட்டிகள் உச்சத்தில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்டாலினை நெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக அறிவாலயத்திலும் சித்தரஞ்சன் சாலையிலும் நடந்த நீண்ட விவாதங்களுக்குப் பிறகு புதிய பொருளாளராக டி.ஆர்.பாலுவை டிக் அடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்! போட்டியில் இருந்த மற்றவர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு முக்கியத்துவம் தருவதாகவும் சொல்லி சமாதானப் படலத்தைத் துவக்கியுள்ளது திமுக தலைமை! 
  

திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், புதிய பொருளாளராக டி.ஆர்.பாலுவும் பதவியேற்கவிருக்கின்றனர்.



 

சார்ந்த செய்திகள்