Skip to main content

''சிங்களக் கடற்படையின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துவிட்டன'' - 23 மீனவர்கள் கைதுக்கு ராமதாஸ் கண்டனம்!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

Ramadan condemns arrest of 23 fishermen

 

நாகை துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கைது செய்யப்பட்ட 23 பேரையும் இலங்கை காரைநகர் பகுதியில் தனிமையில் வைத்துள்ளனர். இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

 

'வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான மூன்று படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

 

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் 75க்கும் மேற்பட்ட படகுகளில் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர். அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழக மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சிங்களப்படையினர், தமிழக மீனவர்களைக் கைது செய்து, அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

 

ramadass

 

நாகை மாவட்டத்தையொட்டிய பகுதியில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பே வெகு சில கிலோமீட்டர்கள் தான். சர்வதேச கடல் எல்லையைக் கூட வரையறுக்க முடியாத அளவுக்கு அப்பகுதியில் கடற்பரப்பு குறுகியதாக உள்ளது. அதனால், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைவதும் இயல்பானது தான். அத்தகைய சூழல்களையே கைது இல்லாமல் மென்மையாகக் கையாள வேண்டும் என்று பன்னாட்டு அமைப்புகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

 

கரோனா பரவல் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சிங்களைக் கடற்படை சற்று கைவிட்டிருந்தது. இப்போது மீண்டும் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டன. 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அடுத்த சில வாரங்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்து விடும். மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை மீட்பது சாத்தியமல்ல என்பதால், அந்தப் படகுகளை நம்பியிருக்கும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்கும் கடமை மத்திய அரசுக்கு உண்டு.

 

udanpirape

 

எனவே, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்புவதை உறுதி செய்யும் வகையில் இந்த சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக வங்கக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளைக் கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் மூன்று படகுகளை மீட்டு வருவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனக்கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்