Skip to main content

"மக்கள் விரோத மோடி அரசும்.., வெண்சாமரம் வீசும் எடுபுடி அரசும்..!!" -பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

 

சர்வதேச சந்தையில் 2020ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை 1பீப்பாய் விலை 33.38டாலராக வீழ்ச்சியடைந்து வணிகமாகும்போது கூட அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கிட மனமில்லாமல் மக்கள் விரோத மோடி அரசு கலால் வரியை லிட்டருக்கு 2.00 ரூபாயும், சாலை வரியை லிட்டருக்கு 1.00ரூபாயும் உயர்த்தி தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 22.98ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 18.83ம் கலால் வரியாக வசூலிக்கிறது. அதனை கண்டிக்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய தமிழக அரசோ கைகட்டி வாய் பொத்தி மோடி அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீரின்றி அமையாது உலகு" என்பதைப் போல இன்று வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் இன்றி மனித வாழ்வு அமைவது கடினம் என்றாகிப் போனது.

 

PONNUSAMY



நுகர்வோர் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கான விற்பனை விலையும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. குறிப்பாக சரக்கு வாகன சேவைக்காக பயன்படும் எரிபொருளான டீசல் விலை உயரும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களால் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என நீலிக்கண்ணீர் வடித்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விற்பனை விலையை பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட போது அதனை கடுமையாக எதிர்த்தது அப்போதைய எதிர்க்கட்சியான பாஜக.


 

ஆனால் அடுத்து பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்து கொள்ளும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கி மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதில் நாங்கள் ஒன்றும் காங்கிரசிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு. அதுமட்டுமின்றி காங்கிரசை மிஞ்சுகின்ற வகையில் மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதில் முன்னோடி அரசாக மோடி அரசு விளங்கி வருகிறது.
 

அது எப்படியென்றால் 2013 - 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங் அவர்கள் ஆட்சியின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  1பீப்பாய் 105டாலராக வணிகமான போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 74.71க்கும், டீசல் ரூபாய் 61.12க்கும் விற்பனை ஆனது. அந்த நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 9.48ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 3.56ம் கலால் வரியாக மத்திய அரசு  வசூலித்தது.


 

அதன் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு (2014-15ல் 84.16டாலர், 2015-16ல் 46.17டாலர், 2016-17ல் 47.56டாலர், 2017-18ல் 56.43டாலர், 2018-19ல் 60டாலர்) கச்சா எண்ணெய் விலை படிப்படியாக சரிந்து 1பீப்பாய் விலை 55.00டாலர் வரை குறைந்த போதும் அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கிடாமல் பெட்ரோல், டீசல் மீதான  கலால் வரியை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி பொதுமக்கள் மீது தொடர்ந்து பாரத்தை சுமத்தியதே வந்திருக்கிறது மோடி அரசு.
 

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக 2020ம் ஆண்டில் கச்சா எண்ணெய்  விலை 1பீப்பாய் விலை 33.38டாலராக வீழ்ச்சியடைந்து வணிகமாகும் போது கூட அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கிட மனமில்லாமல் மக்கள் விரோத மோடி அரசு கலால் வரியை லிட்டருக்கு 2.00ரூபாயும், சாலை வரியை லிட்டருக்கு 1.00ரூபாயும் உயர்த்தி தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 22.98ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 18.83ம் கலால் வரியாக வசூலிக்கிறது. அதனை கண்டிக்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய தமிழக அரசோ கைகட்டி வாய் பொத்தி மோடி அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. 
 

மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கினை கண்டிக்க வேண்டிய தமிழக அரசு பாஜகவின் காலடியில் சரணாகதியாக கிடப்பதற்கும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் போது பெட்ரோல், டீசல் விலையை ரூபாய் கணக்கில் உயர்த்தும் பெட்ரோலிய நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போதும் பொதுமக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் தங்களின் சுயநலம் சார்ந்து செயல்பட்டு வருவதற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 
 

அத்துடன் இதுவரை பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்டுள்ள கலால் வரியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறுவதோடு, பெட்ரோல், டீசல் விற்பனை விலையை குறைந்தபட்சம் 20முதல் 30சதவீதம் வரை குறைத்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்