Skip to main content

“பெரியார் சிலையைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை” - அமைச்சர் பொன்முடி

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 Minister Ponmudi says Annamalai is nowhere near to talk about Periyar statue

 

அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.  

 

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம். 

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆனதற்கு காரணமே பெரியார் தான். தமிழகத்தில் உள்ள அனைவரும் படித்திருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்வுகள் வளர்ந்திருக்கிறது என்றால், அது பெரியார் போட்ட விதை தான். அது யாராலும் மறுக்க முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் பற்றுள்ள அனைவருமே பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் இன்றைக்கு பகுத்தறிவு சிந்தனைக்கு காரணமாக இருக்கக்கூடிய பெரியாரின் சிலையை பற்றி பேசுவது அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. 

 

தமிழகத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணத்தில் இதையெல்லாம் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜ் போன்றோர்களெல்லாம் தமிழக மக்களுக்கு எந்தளவு பாடுபட்டார்கள் என்று அண்ணாமலைக்கே தெரியும். இவர்களின் அறிவு அடித்தள மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சிலைகளை வைக்கிறார்கள்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்